Sunday, August 7, 2011

ஆளு பாதி ஆடை பாதி

மனித நாகரீகத்தின் அடையாளம் உடை. அறிவில் முதிர்ச்சியும், வளர்ச்சியும் பெற்றிருப்பதை நாம் பரிசோதித்துத்தான் பார்க்க முடியும். ஆனால் ஒரு மனிதன் நாகரீக மேம்பாடு பெற்றிருப்பதை அவன் அணியும் ஆடையே காட்டிக்கொடுக்கும். நிர்வாணமாக சுற்றிக்கொண்டிருந்த மனிதன் மரவுரி, விலங்குகளின் தோல், பச்சிலைகள் என்று வளர்ச்சி பெற்று இன்று நவநாகரீக ஆடை அணிந்து உலா வருவது அவனுடைய நாகரீக மேம்பாட்டைதான் கட்டுகிறது. அம்மணமாக உள்ள ஒரு ஓவியம் பார்க்க ஆபாசமாக, அருவெறுப்பை தருவதாக அமையும். அதன் மீது ஆடை என்று சில கோடுகளை வரையும் பொழுது அது முழுமை பெற்று கவர்ச்சியுடன் விளங்குகிறது. சாலையில் நிர்வாணமாக நடந்து வரும் மனிதனை பார்க்கவே நமக்கு கூசுகிறது. அவன் அரை குறையேனும் ஆடை அணிந்து வந்தால்தான் பார்க்க சகிக்கிறது. அத்தகைய வலிமை ஆடைகளுக்கு மட்டுமே உள்ளது. இறை சோதியில் கலந்த மனிதர்களை நிர்வாணம் அடைந்து விட்டார் என்று சொல்கிறோம். ஆன்மாவிற்கு இந்த உடலே ஆடையாக இருக்கிறது. அந்த உடலின் மீது பற்று ஒழித்து ஆன்மாவை உணர்ந்து அதுவாகவே கலந்து விட்ட மனிதர்களைத்தான் நிர்வாணம் அடைந்தவர் என்று சொல்லுவோம். நாம் அவ்வாறு நிர்வாணம் அடையாதவரை வெறும் ஆடைகளை களைந்து நிர்வாணமாக நிற்பது நாகரீக மேம்பாட்டிற்கு எதிரானது. 

இருந்தும் சமீப காலமாக மக்கள் ஆடைக்கு தரும் முக்கியத்துவம் குறைந்து காணப்படுகிறது. ஏனோ தானோ என்று அணிகிறார்கள். அருவருக்கத்தக்க விதமாக அணிவது, அடுத்தவர்களை தூண்டி வன்முறை, ஆபாசம் ஏற்படும் வண்ணம் அணிவது, ஆண்-பெண் என்ற பாகுபாடின்றி அணிவது, சுத்தத்திற்கும் சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்கும் வண்ணம் அணிவது என்று பலவகையிலும் ஆடைகளை அணிந்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கும் அவர்கள் சார்ந்துள்ள சமூகத்திற்கும் அவமரியாதையை உண்டு பண்ணுகிறார்கள். 

ஆடைகள் வெறும் மானப்பிரச்சனை மட்டுமில்லை. அவை அணிபவரின் என்ன ஓட்டத்தை உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை. மங்கலான தோற்றம் கொண்ட ஆடைகள் அணிபவரின் தன்னம்பிக்கையை குறைக்கின்றன. நேர்முகத்தேர்வு, நேர்காணல், சந்திப்பு போன்ற நிகழ்வுகளுக்கு செல்பவர்கள் இத்தகைய ஆடையை அணிந்து செல்லக்கூடாது. மேலும் அடிக்கும் விதமாக பளிச்சென்று காட்டும் வண்ண ஆடைகளை அணிவதால் பார்ப்பவர்களின் மனதில் உடனடியாக நம்மை பற்றிய ஒரு தீர்மானத்திற்கு நாம் அழைத்து செல்வதாக அமையும். நல்ல வெயில் காலங்களில் கருப்பு துணிகள் நம்முடைய உடலையும் மனத்தையும் சூடேற்றி கொந்தளிக்க வைக்கும். சிவப்பு துணிகள் பார்ப்பவர்களின் மனத்தில் கோப அலைகளை உண்டாக்கும். பொதுவாக இள நீல வண்ணம், இளமஞ்சள் வண்ணம் கொண்ட துணிகள் சூழ்நிலையை இலகுவாக்கும். 

துணிகளின் முனைகள் தைக்கப்படாமல் இருக்குமேயானால் நம்முடைய ஆன்ம சக்தி வீணாக வாய்ப்புண்டு. ஆகவே அவற்றை தையலிட்டு அணிவதே நலம். தினமும் துணிகளை துவைத்து அணிவது நல்லது. நாள்பட்ட அழுக்கு படிந்த துணிகள் உடலுக்கு வியாதிகளை உருவாக்கும்.அடுத்தவர் அணிந்த ஆடைகளை அணிவதால் நம் மனத்தில் ஏற்படும் எண்ண அலைகளுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். முழுமையான சிந்தனைகளை சிறந்த ஆடைகள் செதுக்குகின்றன. ஆகவேதான் முன்னோர்கள் ஆளு பாதி ஆடை பாதி என்று சொன்னார்கள். நாம் இன்று அறிவையும் பாதியாக்கி ஆடைகளை ஒதுக்கி வருகின்றோம். 

மனித நாகரீகத்தில் ஆடைகளை பொறுத்த மட்டில் ஆண்கள் அணியும் ஆடைகளையே பெண்கள் பெரிதும் நாடி அணிவது இயல்பு. அவ்விதமே இக்காலங்களில் அவர்களும் டி ஷர்ட் ஜீன்ஸ் பான்ட் அணிவது ஒன்றும் ஆச்சர்யமில்லை. அவை ஆபாசங்களை குறைப்பதோடு, அவர்களுக்கு பாதுகாப்பையும் தருகின்றன. பெண்கள் அவற்றை அணிவதும் எளிது. ஆயினும் ஜீன்ஸ் பாண்ட்கள் தரையை பெறுக்கிக்கொண்டு வருவது போல் அணிவது சுகாதார கேட்டைமட்டுமே விளைவிக்கும். சாலைகளில் உள்ள குப்பை கூளங்கள், எச்சில் துப்புகள் போன்றவற்றை அவை தொட்டுக்கொண்டு நேரே நம்முடைய வீடுகளின் ஒவ்வொரு அறையிலும் அவற்றை தெளிக்கின்றன. கோயிலுக்கும் செல்லுகின்றன. இவற்றை அணிபவர்கள் அருவருப்பாக பார்க்காமல் செல்வது வியப்பாக உள்ளது. அது போன்ற ஆடைகளை நாம் அறவே ஒதுக்க வேண்டும். கணுக்காலுக்கு கீழே ஆடைகள் செல்லுவதை தவிர்க்க வேண்டும். பொதுவாக இஸ்லாமிய பிரிவு நண்பர்கள் இவ்வாறு உயர்த்தி ஆடைகளை அணிவதை பார்க்கலாம். ஆடைகள் குப்பைகளை தொடுவதை நம்முடைய வளர்ச்சிக்கும் சுகாதாரத்திற்கும் எதிரானதாக அவர்கள் பார்க்கிறார்கள். 

குளிர்காலங்கள், வெயில் காலங்கள், மழைக்காலங்கள் போன்ற தனித்தனி காலங்களுக்கேற்ப நாம் ஆடைகளை அணிந்தால் தோல் நோய்கள் மட்டுமின்றி இன்ன பிற தொற்று நோய்களையும் தவிர்க்கலாம். ஐரோப்பாவை போல் அல்லாமல் நம்முடைய நாடு உஷ்ண பகுதியாக இருக்கிறது. இங்கு கோட், டை, பாலிஸ்டர், நைலான் போன்ற ஆடைகள் நம்முடைய சுதந்திரத்தை பறிக்கின்றன. ஏதோ கட்டாயத்தின் பேரில் சில மணி நேரம் அணியலாமே தவிர அவற்றை எந்நேரமும் அணிய கூடாது. திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் இத்தகைய ஆடைகளை அணிந்து கொண்டிருக்கும் மனிதர்கள் படும் அவஸ்தையை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். எப்போது கழற்றி வீசுவோம் என்று எதிர் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இப்படியில்லாமல் வேட்டி அணிந்திருக்கும் நபர்கள் மிக இயல்பாக இருப்பதையும் காணலாம். 

ஆடைகளில் வெறும் நூலோ வண்ணமோ மட்டும் கலந்திருக்கவில்லை. அதில் அணிபவர்களின் வாசனையும் கலந்திருக்கின்றது. அம்மாவின் புடவையை கொண்டே குழந்தைகளின் தூளியை கட்டுவார்கள். இது இந்தியா முழுமைக்கும் இயல்பாக இன்றைக்கும் நடக்கும் விஷயம். அத்தகைய துளிகளில் மட்டுமே அந்த குழந்தைகள் நன்றாக உறங்கும். மற்றைய துணி துளிகளில் அவை உறங்காமல் அழுது கொண்டே இருக்கும். பத்துமாதம் அம்மாவின் ரத்தத்தில் ஊறி அந்த வாசனையை கண்டுகொண்ட குழந்தைகள் அம்மாவின் வாசனை தங்களோடு இருப்பது தமக்கு பாது காப்பு என்று கருதுகின்றன. இதனால்தான் அம்மாவின் துணிமீதோ தூளிகளிலோ, அம்மா மடி மீதோ தோள் மீதோ இருக்கும் போது அமைதியாக இருக்கின்றன. அவற்றை விட்டு நீங்கும்போது பாதுகாப்பின்மையை உணர்ந்து அழுகின்றன. இத்தகைய சூழலில் வளர்ந்த பிள்ளைகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அம்மாவின் மீது பாசத்தையும் அன்பையும் பொழிகின்றன. எண்பது வயதான த்த்தாவாயினும் தனது தாயை நினைந்து அழுகிறார். அவளுடைய பிரிவை தாங்க அவரால் முடியவில்லை. அம்மா முந்தானையே பிடித்து சுற்றும் பிள்ளைகள் நம்மூரில் இயற்கையாகவே பார்க்கலாம். அத்தகைய வலிமை ஆடைகளுக்கு உள்ளது. இப்படி இல்லாததாலேயே அந்நிய நாட்டு பிள்ளைகள் தாயிடம் பாசத்தை காட்டுவதில்லை.

ஆகவே நாம் ஆடைகளுக்கு சிறந்த கவனம் அளிக்க வேண்டும். அவை நாகரீக, கலாசார, பண்பாட்டு அடையாளங்கள். மேலும் தனி மனித தன்னம்பிக்கை, ஒழுக்கம், சுகாதாரம் போன்றவற்றை தீர்மானிக்கின்ற விஷயமாகவும் ஆடைகள் விளங்குகின்றன.