Saturday, June 25, 2011

காலை மாலை வணக்கங்கள்!

சமீப காலங்களில் தமிழர்களிடையே பரவி வரும் ஒரு வித்தியாசமான நோய் இது. நோய்க்கு காரணம் மேல்நாட்டு மோகமும் ரத்தத்துடன் கலந்து விட்ட அடிமைத்தனமும்தான். அந்த நோயாவது, அடுத்தவரை கண்டால் வணக்கம் கூறுவதற்கு பதிலாக "காலை வணக்கம்" "மாலை வணக்கம்" என்று கூறுவதுதான். ஆங்கிலத்தில் Good Morning, Good Evening என்று சொல்கிறோமே அதை இவர்கள் தமிழில் கூறுவதாக எண்ணி நம்முடைய வணக்க முறையையே கேலி கூத்தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் கூறுவதை தமிழில் கூறினால் நல்ல காலை, நல்ல மாலை என்று தான் பொருள் தர முடியும். ஆங்கிலம் வினோத மொழி. அதை நம் கலாச்சாரத்துடன் கலந்து விட்ட தமிழில் தருவதென்றால் தர்ம சங்கடம்தான். உதாரணமாக துக்கம் நிறைந்த வெள்ளிக்கிழமையை ஆங்கிலத்தில் Good Friday என்கிறார்கள். இதை நாம் நல்ல வெள்ளி என்றா நம் மொழியில் சொல்லுகிறோம். இல்லையே. தூய வெள்ளி என்கிறோம். மலையாளிகள் இன்னும் சிறப்பாக துக்க வெள்ளி என்பார்கள். அப்படித்தான் பொருளறிந்து மொழியாக்கம் செய்ய வேண்டும். இனி காலை/மாலை வணக்கத்துக்கு வருவோம். 

அடுத்தவரை பார்த்து வணக்கம் சொல்லும் முறை இந்திய துணைக் கண்டத்திற்கே அதுவும் தமிழ் கலாச்சாரத்திற்கே சிறப்பாக அமைந்த குணம். அவர் நம்மை விட ஏழையானாலும், எளியவரானாலும், படிப்பு மற்றும் பிற தகுதிகளில் குறைந்தவராயினும் அவருக்கு வணக்கம் சொல்ல வேண்டும் என்பது நம் மரபு. வணக்கம் வெறும் வார்த்தையாக இராமல் இரண்டு கைகளை முன்புறம் குவித்து தலையை சிறிது தாழ்த்தி சொல்ல வேண்டும். ஏனெனில் எதிரில் இருப்பவர் சாதாரண மனிதராயினும் அவருள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் வசித்துக்கொண்டிருக்கிறான். நாம் வணக்கம் தெரிவிப்பது அந்த பரமாத்மாவுக்கே என்பது நம் மரபு. அத்தகைய வணக்கத்தில் காலை மாலை என்பதெல்லாம் இல்லை. வெறும் வணக்கம் அல்லது நமஸ்காரம் அல்லது நமஸ்தே சொன்னால் போதுமானது. இத்தகைய ஒரு அறிய தத்துவத்தை அந்நிய மோகம் கொண்டு வெள்ளைக்காரன் ஸ்டைலில் நாம் கூறுவது சரியா? 

வெள்ளைக்காரன் குட் மார்னிங் என்று சொல்லுகிறான். இந்த காலை நல்லது என்பது அதன் பொருள். அவன் நாடு குளிர் நாடு. சூரியனை காண்பது குதிரை கொம்பு. நம்மைப்போல வருடத்திற்கு ஆறு பருவ காலங்கள் என்பதெல்லாம் அவனுக்கு கிடையாது. சுறுசுறுப்பு என்பது அங்கு எப்போதாவதுதான் வெளிப்படும்.ஆகவே குட் மார்னிங் என்று அடுத்தவரை கூறி உற்சாக படுத்தி காரியத்தை முடித்து கொள்வார்கள். இதில் அவர்களில் காரியவாதம் தான் தெரிகிறதே ஒழிய அடுத்தவருக்கு மரியாதை பரமாத்மாவுக்கு வணக்கம் போன்ற சிந்தனைகள் இல்லை. இப்படி பட்ட ஒரு காரியத்தை நாம் காபி அடித்தால் அது நம்முடைய சுய சிந்தனையை அடகு வைத்தது போலல்லவா இருக்கிறது. சுயமாக சிந்திப்பதும் நம்முடைய பாரம்பரியத்திற்கு மரியாதை தருவதும் நாம் அடுத்தவரை கேட்டா தெரிந்து கொள்ளவேண்டும். அது பிறப்பிலேயே வர வேண்டாமா? இனி அடுத்தவரை சந்திக்கும்பொழுது நம் தூய தமிழிலேயே "வணக்கம்" என்று கூறுங்களேன்.   

Tuesday, June 21, 2011

"அம்மா இங்கே வா! வா!"

குழந்தை வளர்ப்பில் நம்முடைய இந்திய தாய்மார்களை மிஞ்ச யாருமே இல்லை. அவர்கள் தங்களின் அரவணைப்பில் குழந்தைக்கு பாசத்தையும் பண்பையும் ஊட்டி வளர்க்கிறார்கள். சமீப காலமாக இத்தகைய இனிய நிகழ்வுகளை காண்பது அரிதாகி வருகிறது. அதுவும் படித்த மேல்தட்டு வசதியுள்ள தாய்மார்கள் மத்தியில் குழந்தைகள் ஒரு பாரமாகவே ஆகிவிட்டார்கள். இந்த கொடிய நோய் மற்ற நிலைகளுக்கு பரவுவதற்குள் இந்தியர்களாகிய நாம் நம் சகோதரிகளுக்கு குழந்தை வளர்ப்பின் இந்திய முறையின் சிறப்பினை எடுத்துக்கூறவேண்டும். 

இப்போதெல்லாம் இளம் தாய்மார்கள் தங்களின் கைக்குழந்தைகளை தூக்க கஷ்டப்படுகிறார்கள். கேரி பேக் அல்லது முதுகு பாரம் போல ஒரு பெல்டில் குழந்தையை மாட்டி தங்களுடன் இணைத்துக்கொள்கிறார்கள். இது அவர்களுக்கு சவுகரியமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் சுமப்பது பாரமல்ல குழந்தை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குழந்தையின் பிட்டப்பகுதி இறுகுகிறது. கால்கள் தனியே ஆடிக்கொண்டு வருகிறது. இதனால் கால் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் தடை படும். வளரும் பருவத்தில் இத்தகைய முட்டுக்கட்டை போடுவதால், கால்கள் சூம்பி போக வாய்ப்புள்ளது. இத்தகைய கொடுமைகள் எதுவும் நம் இந்திய முறையில் இல்லை. இந்திய முறையில் குழந்தையை நெஞ்சோடு அனைத்து தோளில் சுமந்து வருகிறார்கள். குழந்தைக்கு தாயின் மார்பு பகுதி பஞ்சனை போல் செயல்படுகிறது. தன் தாயின் வாசம் அதற்க்கு கிடைத்துக்கொண்டே இருப்பதால் பயமில்லாமல் தூங்குகிறது. உடலின் எந்த பகுதிக்கும் ரத்த ஓட்டம் தடை படுவதில்லை.  

இன்னும் சில தாய் மார்கள் தங்கள் குழந்தைகளை வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வருகிறார்கள். இது மிகவும் தவறு. குழந்தை ஒரு பொருள் என்று கொள்ளக்கூடாது. நாளை நம் குடும்பத்தின் பிரதிநிதி என்று உணரவேண்டும். அவர்களை தனி அறையில் படுக்க வைக்க கூடாது. தாய் தந்தையருடன் தான் படுக்க வைக்க வேண்டும். அதுவும் தாயின் துணியை படுக்கை விரிப்பாகவோ அல்லது தூளியாகவோ கட்டி படுக்க வைக்க வேண்டும். சமீபத்தில் அந்நிய நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவில் அவர்கள் கண்டது இதுதான்: எத்தனை வயது முதிர்ந்த மனிதராக இருந்தாலும் இந்தியர்கள் தங்கள் தாயிடம் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்கள். அவர்கள் குழந்தைகளாக இருந்த பொது தாயின் வாசத்திலேயே வளர்க்கப்படுகிறார்கள். தாயின் புடவையில் தூளி, மெத்தை விரிப்பு, தோளில் சுமப்பது என்று எப்போதும் அந்த வாசத்திலேயே இருப்பதால் அவர்கள் இயற்கையிலேயே தாயிடம் மிகுந்த பாசம் வைத்திருக்கிறார்கள். இத்தகைய அமைப்பு இல்லாததினால்தான் மேலைநாட்டு குழந்தைகள் மிகச்சிறிய வயதிலேயே தாயின் அன்பை உதாசீனப்படுத்துகிறார்கள், என்று அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இக்காலங்களில் நம் இந்திய நங்கைகள் நடந்து கொள்வதை பார்க்கும் பொழுது மிக விரைவில் நாமும் அந்நிய நாடுகள் போல் பாசத்தை பறிகொடுக்கும் நிலை வரலாம் என்று எண்ண தோன்றுகிறது.