சுதந்திரம் என்பது எந்த ஒரு கொள்கைக்கும், கருத்துக்கும், எண்ணத்திற்கும் நாம் ஆட்படாமளிருப்பதே. இவர் சொன்னார், அவர் சொன்னார் என்று நாம் உடனே அத்தகைய கருத்துக்களுக்கு வசப்பட்டு போகின்றோம். நம் மூளையின் சிந்திக்கும் ஆற்றலை அடுத்தவரின் மூளையின் கொள்கைகளுக்கு அடகு வைக்கின்றோம். அவை எத்தகைய கொள்கையாயினும் சரி. உதாரணமாக கடவுள் ஏற்பு கொள்கை என்றும் மறுப்பு கொள்கை என்றும் இரண்டாக பிரிந்து காலம் காலமாக வாத பிரதி வாதங்கள் நடக்கின்றன. இவற்றில் நாம் ஏதோ ஒரு பிரிவில் பங்கு கொண்டு வருகிறோம். நாம் நமது சுய சிந்தனையை இங்கே செயலிழக்க வைத்து விடுகிறோம். இவற்றை அலசி ஆராய்ந்து நம் சுய வழியில் செல்ல விழைவதில்லை. உடலில் சக்தி இருக்கும் வரை கடவுள் இல்லை என்று ஆராயாமலேயே கூறுகின்றவர்கள் எல்லாம் சக்தி ஒடுங்க தொடங்கிய உடனே கடவுள் உள்ளார் என்று மறுபடியும் ஆராயாமலேயே தொழ தொடங்குகிறார்கள். இவர்களிடம் அடிமைத்தனம் உள்ளதே ஒழிய சுதந்திர எண்ணம் துளி கூட இருப்பதில்லை. சுவாமி விவேகானந்தர் கூறினார்: நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை செய்வது சுதந்திரம் இல்லை. நீங்கள் என்ன செய்ய கூடாது என்று எண்ணுகிறீர்களோ அதை செய்யாமலிருப்பதும் சுதந்திரம்தான். நம்மில் எத்தனை பேருக்கு சுதந்திரம் உள்ளது? கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலை பாருங்கள்.
நாம் அனைவரும் ஆங்கில காலண்டரையே ஏற்றுக்கொண்டுள்ளோம். இன்றைய உலகமயமாக்களில் அனைத்து நாடுகளுடன் தொடர்பை வைத்துக்கொள்ள இது பயனுள்ளதாக உள்ளது. ஆயினும் நமது தனித்தன்மையான சில விஷயங்களில் கூட இந்த ஆங்கில காலண்டரை பயன்படுத்துவது அந்நிய மோகத்தினால் ஏற்பட்ட அடிமைத்தனத்தின் வெளிப்பாடுதான் காரணம். அராபிய மற்றும் சீன நாடுகளும் மற்றைய நாடுகளுடன் வர்த்தக பரிவர்த்தனைகளுக்காக ஆங்கில காலண்டரை பயன்படுத்தினாலும் அவை தங்கள் பயன்பாட்டிற்காக தங்கள் தங்கள் காலண்டரையே பயன்படுத்துகின்றன. நம் நாட்டில் இப்படி நாம் செய்வதில்லையே. பேருக்குத்தான் சக ஆண்டை நம் நாட்டின் தேசிய காலண்டராக கொண்டிருக்கிறோம். ஆனால் அனைத்திற்கும் ஆங்கிலக் காலண்டரையே பயன்படுத்துகிறோம்.
சரி. இவர்கள்தான் இப்படி என்றால், குடி மக்களாகிய நாம் என்ன செய்கிறோம். கோயில் வழிபாடு, நம் வீட்டு விசேஷம், பிறந்த நாள், திருமண நாள் கொண்டாட்டம் என்று அனைத்து விதமான சொந்த காரியங்களிலும் ஆங்கில காலண்டரை பயன் படுத்துகிறோம். நம் இந்து காலண்டர் படி ஒரு நாள் என்பது அன்றைய சூரிய உதயத்திலிருந்து மறுநாள் சூரிய உதயம் வரை என்பதாகும். அனால் நாம் நள்ளிரவில் எழுந்து மெழுகு வர்த்தி ஏற்றி "ஹாப்பி பர்த் டே" என்று சொல்லி மகிழ்கிறோம். ஆங்கில ஆண்டு கடைசி நாள் நள்ளிரவு நம் நாட்டில் உள்ள கோயில்களை திறந்து வைத்து இறைவனை தரிசிக்கிறோம். நள்ளிரவில் கோயில் திறப்பதே கூடாது. அது ஆகம விதிகளுக்கு புறம்பானது. சிவராத்திரியை தவிர மற்றைய நாட்களில் இரவில் கோயில்களில் தரிசனம் கிடையாது. இந்துக்களுக்கே உரிய இந்த வழக்கத்தை புறக்கணித்து விட்டு நாம் அந்நிய கொள்கைகளுக்கு அடிமைகளாக உலா வருகின்றோம். பிறந்த நட்சத்திரத்தை வைத்துதான் நம் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும். அனால் நாம் இதிலும் ஆங்கிலத்தை கடை பிடிக்கிறோம்.
எந்த காலண்டரை கடை பிடித்தால் என்ன? கொண்டாட்டம் தான் முக்கியம் என்கிறீர்களா? அதில்தான் இருக்கிறது சூட்சுமமும் நம்முடைய அடிமைத்தனத்தின் வெளிப்பாடும். இந்து காலண்டர் என்பது கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தை சார்ந்து அமைவது. சூரியன் உதிக்கும் நேரத்தை கொண்டே நாளின் நேரம் குறிக்கப்படுகின்றது. கோடையில் சூரியம் அதிகாலை 5:30 மணிக்கே உதயமாகின்றது என்றால் அது குளிர் காலத்தில் 6:30 மணிக்கு உதயமாகிறது. சந்திரன் வளர்வது, தேய்வது, ஒவ்வொரு நாளும் அது எந்த நட்சத்திரத்துடன் இருக்கின்றது என்பன போன்றவற்றையெல்லாம் தெரிவிப்பதுதான் நம் இந்து காலண்டர். இதன் அர்த்தமாவது, இன்னின்ன நிலைகளில் சூரியன், சந்திரன், கோள்கள் மற்றும் பிற நட்சத்திரங்கள் அமைந்திருக்கும் பொழுது இந்த நிகழ்வு நிகழ்ந்தது. அதாவது நம்முடைய பிறந்த நாள் என்று வைத்துக்கொள்வோம். அத்தகைய அமைவுகள் வானில் மீண்டும் அமையும் பொழுது தானே நாம் அதை கொண்டாட முடியும். அதுதான் இயற்கையோடு ஒன்றிய நிலை எனப்படும்.
ஆனால் ஆங்கில காலண்டர் எத்தகையது. அது பல காலங்களில் பல மாறுதல்களை கண்டது. முதலில் பத்து மாதங்களை கொண்ட ஆண்டாக இருந்தது. பிறகு ஜூலியஸ் சீசர் மற்றும் அகஸ்டஸ் சீசர் மன்னர்களால் ஜூலை, மற்றும் ஆகஸ்டை சேர்த்து பன்னிரெண்டானது. இயேசு நாதர் பிறந்த காலங்களை கணக்கில் கொண்டு ஆண்டின் எண்ணிக்கை தொடங்கியது. இத்தகைய காலண்டருக்கு சூரிய சந்திர கிரகங்களின் இயக்கத்துடன் எந்த ஒரு சம்பதமும் இல்லை. ஆண்டிற்கு 365 நாட்கள் என்று கொண்டாலும் அவர்கள் நான்காண்டுகளுக்கு ஒரு முறைதான் இழந்த கால் நாட்களை கணக்கில் எடுத்து கொள்கிறார்கள். இத்தகைய ஒரு காலண்டருடன் நம் கொண்டாட்டங்களை வைத்து கொள்வது முற்றிலும் ஒரு அந்நிய மற்றும் ஆங்கில அடிமைத்தனத்தின் வெளிப்பாடாகவே கொள்ளப்பட வேண்டும்.
ஏன் என்றால் ஆங்கில கல்வி முறையை இந்நாட்டில் முதன் முதலாக வடிவமைத்து புகுத்திய லார்ட் மெக்காலே கூறினார்: "ஆங்கிலேயர்களாகிய நாம் ஒரு நாள் இந்த இந்திய மண்ணை விட்டு வெளியேறினாலும் என்றென்றைக்கும் அவர்களின் சிந்தனை என்பது நம் ஆங்கிலத்திற்கு அடிமை பட்டதாக இருக்க வேண்டும். அத்தகைய கல்வி முறையையே நான் இந்தியாவிற்கு அளிக்கிறேன்". எத்தகைய தீர்க்கமான வார்த்தைகள்? அந்நியர்கள் வடிவமைத்த கல்விமுறையை பயின்று வந்த நாம் அவர்களுக்கு என்றென்றைக்கும் அடிமைகளாகவே இருந்து வருகிறோம்.
நம்முடைய கல்வி முறை என்பது முற்றிலும் வேறானது. மாணவர்களின் சிந்தனா சக்தியை வளர்ப்பது. நம்முடைய வேதங்களும், உபநிடதங்களும் ஏன் என்ற கேள்வியை கேட்க தூண்டுகின்றன. கேள்வியை கேட்டுதான் குருவிடமிருந்து தகுந்த பதிலை பெறுவதாகவே அவை அமைந்திருக்கின்றன. "வேதங்கள் உண்மை" என்று நாம் தினமும் சந்தியா வந்தன காலங்களில் கூறி வேத கூற்றுகளுக்கு களங்கம் கற்பிக்காமல் இருந்து வரவேண்டும் என்பதாக நமக்கு போதிக்கப்பட்டிருந்தாலும் அவை கேள்வி கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று அறிவுரை போதிக்கின்றன. நாம் சுயமாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதே அவற்றின் நோக்கம். பகவத் கீதையை சுமார் 700 சுலோகங்கள் மூலம் அர்ஜுனனுக்கு போதித்த பரந்தாமன் கூட அர்ஜுனன் கேள்வி கேட்டு பதில் அளிக்கின்ற வகையிலேயே அவனுடைய ஐயங்களை போக்குகின்றான். பல கேள்விகளுக்கு பல்லாற்றானும் பதில் சொன்ன பார்த்தசாரதி கடைசியில் உனக்கு எது நன்மைதருமோ அதை யோசித்து செய் என்று அர்ஜுனனுக்கு தெரிவிக்கின்றான். அதாவது கண்ணனின் கொள்கைகளும் கருத்துக்களும் கூட அர்ஜுனன் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது. அவன் சுயமாக சிந்திக்க வேண்டும் என்றுதான் அமைந்துள்ளது அது. இதே போன்றே பல இதிகாச, புராணங்கள் அமைந்துள்ளன. அவற்றை பற்றிய சந்தேகங்களை நீங்கள் கேள்விகளை கேட்டே போக்கி கொள்ள வேண்டும். அந்நிய மத நூல்கள் இத்தகைய சுதந்திரங்களை தருவதில்லை. அவற்றின் குறுக்கே கேள்விகள் கேட்டால் அவனை தீர்த்து விட வேண்டும் என்ற வகையிலேயே அவை மிரட்டும் பாணியை கடை பிடிப்பதை காணலாம்.
இத்தகைய சுதந்திர மண்ணில் பிறந்த நாம் இப்படி அந்நிய பொருட்களுக்கும், கருத்துக்களுக்கும் அடிமை பட்டு கிடப்பதை பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக உள்ளது. நாம் ஒவ்வொருவரும் நம் இந்து கொள்கைகளை படிப்பதினாலும் அவற்றின் ஆழ் பொருளை அலசி ஆராய்வதினாலும் நம் அடிமைத்தனத்தை போக்கி கொள்ள முடியும். ஒவ்வொருவரும் சுயமாக சிந்திக்கின்ற வகையில் சுதந்திரம் பெற முடியும் என்று எண்ணுகிறோம்.
No comments:
Post a Comment